மனிதநேய சேவை ரத்னா விருது 2026, Humanitarian Service Ratna
Rev Dr J Francis Xavier Nelson PhD,
| Rev Dr J Francis Xavier Nelson PhD |
இவர் குமரி மாவட்டத்திலுள்ள இராமன்புதூரில் திருமிகு M. ஜோசப்ராஜ் மற்றும் திருமதி A. ஜோஸ்பின் மேரி தம்பதியினருக்குப் பிறந்தவர். தற்போது கோட்டாறு மறைமாவட்ட திருப்புமுனை போதை நோய் நலப்பணியின் (Thiruppumunai Addiction Treatment Ministry) இயக்குநராகப் பணியாற்றுபவர். 2016 முதல் 2021 வரை ஆற்றுப் படுத்துதல் பணியின் (Counseling Ministry) இயக்குநராகச் செயல்பட்டவர்.
கல்வியும் பயிற்சியும்: மெய்யியலும் இறையியலும் பயின்றவர். ஆங்கிலத்திலும் சமூகவியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் சமூகப்பணி, போதைநோய் ஆற்றுப் படுத்துதல், NLP ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு போதைநோய் ஆற்றுப்படுத்துதலில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் ஆற்றுப்படுத்துதல், குழந்தைகளை ஆற்றுப்படுத்துதல், வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்துதல், குடும்பங்களை ஆற்றுப்படுத்துதல், மனநல ஆற்றுப்படுத்துதல் முதலியவற்றில் பின்முதுகலைப் பட்டம் பெற்றவர்.
நிம்கான்ஸ் (NIMHANS) தேசிய மனநல நரம்பியல் நிறுவனத்திலும், டிடிகே (TTK) போதைநோய் மருத்துவமையத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மேலும் ஆற்றுப்படுத்துநர், போதைநோய் ஆற்றுப்படுத்துநர், குடும்ப ஆற்றுப்படுத்துநர், மனநல ஆற்றுப்படுத்துநர், சமூகப்பணியாளர், உளப்பகுப்பாய்வாளர் அமைப்புகளின் உறுப்பினராக இருப்பவர்.
உரிமமும் சான்றிதழும்: சமூகப்பணியிலும், போதைநோய் ஆற்றுப்படுத்துதலிலும் அமெரிக்க அரசு உரிமம் (License) பெற்றவர். உளப்பகுப்பாய்வுமுறை, நோயாளிகளைச் சந்திக்கும் முறைகளில் சான்றிதழ் (Certificate) பெற்றவர். பணிக்கான வழிகாட்டுதல்முறை, ஆழ்துயில் சிகிச்சைமுறைகளில் பட்டயச் சான்றிதழ்களை (Credentials) அமெரிக்காவில் பெற்றவர்.
தயாரிப்பும் வெளியீடும்: "மாணவர்களே! போதையல்ல நமது பாதை". "இளையாரே! போதையில்லா சமூகம் உருவாக்குவோம்", "போதையைத் தவிர்க்கும் நமது குடும்பம்", "வேண்டாமே... போதை" "போதையில்லா வாழ்வை நேசி", "போதையில்லா... பாதையிலே*", "மதுநோய் விழிப்புணர்வு கையேடு", "மதுநோய்: தெரிந்ததும் தெரியாததும்", "தற்கொலைத் தடுப்புக் கையேடு" இளையாரே, போதைப்பொருளை உட்கொளல் ஒரு கொண்டாட்டமா, பொழுது போக்கா, பழக்கமா, நோயா?" என்ற புத்தகங்களை எழுதியவர். "குடும்ப ஆற்றுப்படுத்துதல் கையேடு", "மாணவரை ஆற்றுப்படுத்துதல் கையேடு", "மனநல ஆற்றுப்படுத்துதல் கையேடு" "வளர்ச்சிப் பருவ ஆற்றுப்படுத்துதல் கையேடு" என்ற புத்தகங்களைத் தொகுத்தவர். சிறந்த புத்தகம் என்ற பாராட்டை தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தினகரன், தமிழ் இந்து செய்தித்தாள்களிடமிருந்தும் பெற்றவர்.
மேலும் "போதையில்லாப் பாதையிலே", "விழித்தெழு மாணவரே" என்னும் போதை விழிப்புணர்வுப் பாடல் ஒலித்தட்டுக்களையும், "சின்ன வயசில பெரிய சவால்" மற்றும் "கரைசேர்" என்ற போதை விழிப்புணர்வு சின்னத்திரைப்படங்களையும் நாஞ்சில் நாதத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டவர்.
பணியும் பங்களிப்பும்: மக்களின் இன்றைய வாழ்வுச் சூழல்களையும், தேவைகளையும் கருத்திற்கொண்டு ஆற்றுப்படுத்துதல், மதுநோய் ஆற்றுப்படுத்துதல், குடும்ப ஆற்றுப்படுத்துதல், மாணவரை ஆற்றுப்படுத்துதல், கல்வி/வேலை/பணி சார்ந்த ஆற்றுப்படுத்துதல், மனநல ஆற்றுப்படுத்துதல், மனித வளர்ச்சிப் பருவ ஆற்றுப்படுத்துதல், போதைப்பொருள்நோய் பயிற்சி, ஊடகப்போதைநோய் பயிற்சி, நடத்தை மாற்றுதல் பயிற்சி, மற்றும் வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பயிற்சி என்று 11 விதமான 100 மணிநேர பட்டயச் சான்றிதழ் பயிற்சிகளை ஹோலி.கிராஸ் கல்லூரியுடன் இணைந்து சிறப்பாக நடத்தியவர்.
ஹோலி கிராஸ் கல்லூரியின் சமூகப்பணித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் சிறப்புப் பயிற்சியளிப்பாளராக இருப்பவர்.அண்மையில் இந்தியாவையும் கடந்து இலங்கை வரை விசாலப்பட்டுள்ளது இவரது பணி.
முயற்சியும் முன்னெடுப்பும்: “போதை இல்லாத கன்னியாகுமரி மாவட்டம்” (Drug Free Kanyakumari District) சிறப்புத் திட்டத்தில், தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்து மாவட்டத்தில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டப்பணிகளை முன்னெடுப்பவர். இதற்காக பலதடவை மாவட்ட ஆட்சியராலும் மாவட்ட நிர்வாகத்தாலும் கௌரவிக்கப்பட்டவர்.
“தினத்தந்தி” “தினகரன்” “தமிழ் இந்து” போன்ற நாளிதழ்களில் இவரது புத்தகங்களுக்குச் சிறந்த மதிப்புரை பெற்றவர். “தென்ஒலி” “புதியதேடல்”, “நம்வாழ்வு”, “தோழன்”, “அரும்பு” போன்ற பத்திரிகைகளில் பொதுவிழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து எழுதுபவர்.
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ், அலனான், அலட்டீன் தன் உதவி (Self-help) அமைப்புகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு அவை சிறப்புறச் செயல்பட முன்னிற்பவர்.
நாள்:24-01-2026
Holycross College, NAGERCOIL
0 Comments